சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் மகாபலிபுரம் செல்லும் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு 'சமராபுரி' என்னும் பெயரும் உண்டு. முருகப் பெருமான் அசுரர்களை எதிர்த்து மூன்று விதமான இடங்களில் போர் புரிந்தார். அவர் கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர். இங்கு அவர்களது மாயை அகன்றது. நிலத்தில் போர் புரிந்த தலம் திருப்பரங்குன்றம். இங்கு அசுரர்களின் கன்மம் நீங்கியது. விண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர். இத்தலத்தில் அவர்களின் ஆணவம் அடங்கியது.
பூமிக்குள் மறைந்து கிடந்த இக்கோயிலின் மூலவரை பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையில் இருந்து இங்கு வந்த ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள், பனங்காடாக இருந்த இப்பகுதியில் சுயம்பு மூர்த்தியாக, முருகப் பெருமானை கண்டறிந்தார். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சுயம்பு மூர்த்தியாக கந்தசுவாமி என்ற பெயருடன் காட்சியளிக்கிறார். எனவே மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டும் சாத்தப்படுகிறது. மூலவருக்குக் கீழே உள்ள சிறு விக்கிரத்துக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலத்தில் ஸ்ரீசக்கரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கருவறை பிரகாரத்தை வலம்வரும்போது இரண்டு அபூர்வமான, அற்புதமான முருகப்பெருமானின் செப்புத் திருவுருவச் சிலைகளைக் காணலாம். ஒன்று சிவபெருமானது மடியில் முருகன் அமர்ந்திருக்க, ஈசன் வாய்புதைத்துக் குழந்தையிடம் பிரவணப் பொருளை உபதேசம் பெறும் காட்சி. மற்றொன்று முருகப்பெருமான் வலது காலை மயில்மீது ஊன்றி வில்லேந்திய கோலத்தில் காட்சிதரும் முத்துக்குமாரசுவாமி வடிவம். ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளுக்கும் இங்கு தனிச்சன்னதி உள்ளது. திருப்போரூர் எல்லையில் உள்ள கண்ணுவம்பேட்டையில் சிதம்பர சுவாமிகளின் சமாதி உள்ளது. திருக்கோயிலின் வாயில் எதிரே என்றும் வற்றாத பெரிய திருக்குளமான 'சரவணப் பொய்கை' உள்ளது.
தற்போது சென்னை ஜார்ஜ் டவுனில் இருக்கும் கந்தகோட்டம் கந்தசுவாமி மூலவர் விக்கிரகமும் இங்கிருந்துதான் எடுத்துச் செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்போரூர் பாத யாத்திரை செய்யும் அன்பர்கள் கனவில் முருகப்பெருமான் தோன்றி வேம்படி விநாயகர் கோயில் அருகில் தான் புதையுண்டு கிடப்பதை வெளிப்படுத்தினார். அவர்கள் அங்கிருந்து முருகப்பெருமானைக் கொண்டு வந்து சென்னையில் பிரதிஷ்டை செய்தார்கள். |